You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
இலங்கையிலேயே அதி உன்னதமான மரவேலைப்பாடுகள் கொண்ட பழமையான முருகன் ஆலயம்.

2019-03-27


இலங்கையில் பல பிரதேசங்களில் தற்போது தமிழர்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் வாழ்ந்ததற்கான் அடையாளங்கள் இன்னமும் அப்பிரதேசங்களில் அழிக்கமுடியாத சுவடுகாக காணப்படுகின்றன. அந்த வரிசையில் இலங்கையின் அதி உயர் கலைபடைப்புகளை பிரதிப்பளிக்கும் எம்பக்க தேவாலயமும் ஒன்று.

ஆலயம் உருவான வரலாறு


கி.பி. 1370 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கையின் கம்பளை இராச்சியத்தை ஆட்சி செய்த  மூன்றாம் விக்கிரபாகு மன்னன் எம்பக்க என்ற இடத்தில் மக்கள் கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு செய்வதை கண்ணுற்று அங்கு ஒரு தேவாலயத்தை அமைக்க நன்கொடை வழங்கி ஆலயத்தை அமைத்துள்ளார். 


இவ் இடத்தில் கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு நடந்தமைக்கு ஒரு சுவாரஷ்யமான கதை உள்ளது. கண்டி வியனமுழ எனும் இடத்தை சேர்ந்த முருக பக்தனான மேள வாத்தியக்காரன் ஒருவன் கடுமையான குஷ்ட ரோகத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். அவன் தன் நோய் நீங்க வேண்டுமென கதிர்காமக் கந்தனிடம் நேர்த்தி வைக்க அவனது நோயும் நீங்கியுள்ளது.


அதனால், மகிழ்ச்சியடைந்த அவன், வருடந்தோறும் கதிர்காமத்துக்குச் சென்று கந்தப் பெருமானை வழிபட்டு வந்துள்ளான். ஒருநாள் கனவில் தோன்றிய கதிர்காமக் கந்தன் வந்து எம்பக்க எனும் ஊருக்குப் போகும் படி பணிக்க, அந்த ஊருக்கு வாத்தியக்காரன் சென்றபோது அங்குள்ள தச்சன் ஒருவன் கதிர மரம் ஒன்றை தரிசிப்பதாகவும் அதில் இரத்தம் சீறிப் பாய்வதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.


வாத்தியக்காரன் தச்சனை சந்தித்து தான் கனவில் கேட்டதைக் கூற அம்மரத்திற்கு தச்சன் அறுசுவையுடன் உணவு படைத்தும், வாத்தியக்காரர் மேளவாத்தியம் இசைத்தும் வழிபடத் தொடங்கினார்.


இவ்வழிபாட்டு இடமே மூன்றாம் விக்கிரபாகு மன்னனால் தேவாலயமாக நிர்மானிக்கப்பட்டது. இன்றும் இவ் ஆலயத்தில் இவ் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் மூன்று வேளை பூசை வழிபாடுகள், உணவுப்படையல், மேள வாத்திய இசையுடனுமே நடைபெறுகின்றன. 


ஆலய அமைப்பு


இலங்கையிலேயே அதி உன்னதமான மரவேலைப்பாடுகள் கொண்டது எம்பக்க தேவாலயத்தில் தான். தமிழ் கடவுளின் வழிபாட்டுத்தளமான இவ் ஆலயம்  வியக்கவைக்கும் கலைப்பண்புகளுடனும் பல வேலைப்பாடுகளுடனும்  கட்டப்பட்டுள்ளது. 


கோயிலின் பிரதான மண்டபம் விசாலமாகவும் மேள வாத்தியம் இசைக்கவும் ஆடிப் பாடவும் ஏற்ற விதத்தில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் வேறு எங்கும் பார்க்க முடியாத தனிச்சிறப்பு எம்பக்க தேவாலய கூரைகளுக்கு உள்ளது. வாத்தியக்கார மண்டபம் என்றழைக்கப்படும். முன் மண்டபம் அதன் நீளமான பக்கத்தில் ஆறு தூண்களும், அகலமான பக்கத்தில் நான்கு தூண்களும் கூரையைத் தாங்கி நிற்கின்றன.


அதனைத் தவிர உட்புறம் நான்கு பக்கத்திலும் வரிசையாக மொத்தம் 32 தூண்கள் மேலும், கூரையைத் தாங்கி நிற்கின்றன. கூரையைத் தாங்கும் தூண்களுக்கும் கூரைக்கும் இடையில் இணைப்புப்பாலங்களாக சமாந்தரங்களாக இடது புறமாகவும் வலது புறமாகவும் 7 ஜோடித் தூண்கள் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ளன.
கூரையில் அகலவாக்கில் 12 பலகைகளும், நீளவாக்கில் 66 பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர கூரையின் இறங்கு பிரதேசத்தைப் பிரித்து அவற்றில் இரு புறமும் நீளவாக்கில் 41 பலகைகளும், அகலவாக்கில் 12 பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பலகைகள் அனைத்தும் கூரையின் உச்சியில் குருப்பாவை என்றழைக்கப்படும் உத்தரத்தில் பிணைக்கப்பட்டிருக்கின்றமை பார்ப்பவர்களை வியக்கச்செய்கிறது


நம்நாட்டிற்கே உரித்தான கலை அம்சம் கொண்டு செதுக்கப்பட்டுள்ள இத்தகைய குருப்பாவையுடன் கூடிய உத்தரத் தூண்கள் இலங்கையில் வேறு எங்குமே கிடையாது என்று சொல்லப்படுகின்றது.


எந்த விதமான இரும்பு ஆணி வகைகளும் பாவிக்கப்படாமல் முற்றிலும் மரத்தாலான வேலைப்பாடுகள் மட்டுமே கொண்டு முழுக் கூரையும் அமைக்கப்பட்டுள்ளமை, ஏறக்குறைய இங்குள்ள தூண்களில் 600க்கும் மேற்பட்ட மரவேலைப்பாட்டு அலங்கார ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பை அதிகமாக்கியுள்ளது. 


இப்படி அமையப்பெற்ற தேவாலயம் காலப்போக்கில் இந்துக்களின் அடையாளத்தை முழுமையாக இழந்து பௌத்தர்களின் புனித தலமாக மாற்றம்பெற்றது. பௌத்தர்கள் மத்தியில் இத் தலத்திற்கென ஒரு தனி சிறப்பு உள்ளது. இந்து கடவுள் என்ற போதும் இவ் ஆலயம் இன்று சிங்களவர்கள் வழிப்படும் விகாரையாக மாறிப்போயுள்ளது.